எப்போதும் இல்லாத அளவு இந்தாண்டு (ஏப்-23-ம் தேதி) புத்தகதினம் அதிகமாக கவனிக்கப்படுவதைப்போல உணர்கிறேன். காரணம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும், புத்தகதினத்தைக் கொண்டாட அரசு முயற்சி எடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்துப் பதிப்பகங்களுமே முடிந்த அளவு வாசகர்களை கவர்வதற்கான வேலைகளில் இறங்கி, 10 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை சலுகைகளை அறிவித்துள்ளது
டிஸ்கவரி புக் பேலஸ்- போன்ற புத்தக நிலையங்களின் நிலை ஒரு பக்கம் வாய்க்கும், வயிற்றுக்கும் என இழுத்துக்கொண்டிருந்தாலும், எல்லாநாளும், எல்லா மாதங்களும், ஏதேனுமொரு மாவட்ட தலைநகரின் ஒதுக்குப்புற கல்யாண மண்டபத்தை அடைத்துக்கொண்டு புத்தகக்கண்காட்சி நடத்துகொண்டிருப்பதை இப்போது நீங்கள் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் காணலாம். பிறகு அங்கிருந்து களைக்கூத்தாடிகளைப்போல நகர்ந்து அடுத்த மாவட்டத்திற்கு சென்றுவிடுவார்கள். வாசகனை மட்டுமே நம்பி இந்த வேலையை ஒரு பக்கம் புத்தக விற்பனையாளர்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஓயாது புத்தகங்களை விளைவித்துவித்துக் கொண்டிருக்கும் பதிப்பகங்களிடமிருந்து, இவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் தன் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கவேண்டிய பதிப்பகங்களே, இப்போது போட்டியாளனாக களமிறங்கிவிடுவது கிட்டத்தட்ட வேறெந்த தொழிலிலும் இல்லாத முக்கியான சவாலாகும். சாதாரன நாட்களில் வாசகனுக்கு 10% தள்ளுபடி தரவே மூக்கால் அழும் பதிப்பகங்கள், விற்ப்னையாளார்களுக்கு கூடுதலாக 5% கேட்டால் குற்றவாளிக்கூண்டில் நிற்க வைக்கும் அதே பதிப்பாளர்கள், புத்தக தினத்தில் மட்டும் 50%வரை தள்ளுபடி அறிவிப்பது ஆச்சரியமே. அதனினும் ஆச்சரியமானது ஒரு கண்காட்சியே முழுக்க முழுக்க 50% தள்ளுபடிக் கண்காட்சியாகவும் நடத்த முடிகிறது. இதில் பதிப்பகங்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். நிச்சயமாக விற்பனையாளர்களுக்கு இதில் இடமில்லை. அதற்கான சூழலும் இல்லை.
பபாசி நடத்தும் சென்னையின் முக்கியமான அடையாளமாக விளங்கும் ஜனவரி புத்தகக் கண்காட்சியில்கூட பதிப்பகங்களுக்கென்று தனியாக ஒரு அரங்கை ஒதுக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையெல்லாம் ஒருகட்டத்தில் வைக்கப்பட்டது. இவையெல்லாம் அப்பட்டமான விற்பனை சார்ந்த வியாபார நோக்கமே அன்றி, எந்தவிதத்திலும் தமிழ்தொண்டாற்றும் தனிவிருப்பம் அல்ல. அதனால்தான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் இருப்பது எதுவுமே பதிப்பகங்கள் அல்ல, எல்லாமே விற்பனையகங்கள் என்று.