நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Tuesday, May 15, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – எனது (வேடியப்பன்)  துவக்க உரை





சென்னையில் பதிவர் சந்திப்பு என்றால் அது பெரும்பாலும் டிஸ்கவரி புக்  பேலஸில்தான் நடக்கும். இதுவரை ஒரு முறை கூட நில அபகரிப்பு கேஸ் போடாமல் நமக்கு இடம் அளித்து வரும் உரிமையாளர் வேடியப்பன் அவர்களுக்கு மிக்க நன்றி. வரும் மே 20 ஆம் தேதி ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ள சென்னை யூத் பதிவர் சந்திப்பின் முன்னோட்டமாக வேடியப்பன் அவர்களின் மடல் உங்கள் பார்வைக்கு: நன்றி.  மெட்ராஸ் பவன்

                                                                     
   மீண்டும் ஒரு பதிவர் சந்திப்புக்கு தயாராகிவிட்டோம். இந்த நேரத்தில் எப்போ எங்கு எப்படி செம்புலப்பெயர் நீர்போல் பதிவர்களோடு நான் கலந்துபோனேன் என்று கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையில்லை. எனக்கும் பதிவர்களுக்குமான  இந்த உறவு என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லலாம். ஆனால் ஒரு விவாசாயி பெத்த புள்ளைங்கிற முறையில எனக்கு தெரிஞ்சு எந்தப் பயிரும் ஆயிரங்காலத்துக்கு அழியாம தொடருதான்னு தெரியில. நான் சின்ன வயசுல பாத்த சாமைவரகுதினை போன்ற சத்துமிக்க பயிர் வகைகளே இப்போது காணாமல் போச்சு. சரி ஆயிரங்காலத்துப் பயிர் வேணாஆயிரங்காலத்துப் File எனலாம் என்றால் காலையில சேவ் செய்து வெச்சுட்டுப்போற பைல மதியம் வந்து ஓபன் பண்ணுனா வைரஸ் அது இதுனு காணாமப் போயிடுது. அப்போ எந்த உவமையை அடிப்படையா வெச்சு எனக்கும் பதிவர்களுக்குமான பந்தத்த விலக்க முடியும்னு நம்புறேன்னு தெரியில. யாராவது காசுகொடுத்தால் ஒரு புத்தகமாகவே போட்டு சம்பாதித்து விடுவேன். அவ்வளவு விசயம் ஒரே நேரத்தில ஞாபகத்திற்கு வருது.  



வந்த வேலையை விட்டுட்டு பந்தக்காலைப் பிடிச்சுட்டு நிக்கிறான்னு சொல்லுவாங்க. அப்படித்தான் நான் இப்போ சொல்ல வந்தத விட்டுட்டு வேற எதையோ எழுதிட்டு இருக்கேன்னு நினைச்சீங்கன்னா அதுக்கு காரணம் பதிவர்களான நீங்கதான். நீங்க கத்துக் கொடுத்ததுதான். சரி விசயத்துக்கு வரேன்.  2009 முடிவில் டிஸ்கவரி புக் பேலஸ் ஆரம்பிச்சப்பதான் எனக்கு பதிவர்கள், பிளாக்கர்ஸ்ங்கிற சொல்லே கேள்விப்பட்டேன். அப்புறம் கேபிள்ஜி எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுக் கொடுத்து எழுதுனு சொன்னப் பிறகுதான் சரி... ப்ளாக் எழுதிறதில இருக்கிற நல்லது கெட்டது தெரிஞ்சது. 

நான் ஒரு போஸ்ட் போட்டுட்டு, அதை படிக்கச் சொல்லி நானே போன் போட்டு சொல்லி, அப்புறம் பின்னூட்டம் வேற போட்டாகனும்னு கட்டாயப்படுத்திய காலங்களில்தான் உங்களின் சகிப்புத்தன்மையை நான் முழுதாக உணர முடிந்தது. எனக்கும் அப்போ ஆயுசு கெட்டிங்கிற சந்தோஷம். அதுக்கபுறம்தான்  சரி.. வேணா.... முதல்ல மற்றவங்க எழுதுறத நம்ம படிக்க ஆரம்பிக்கனும்னு ஒரு முடிவுக்கு வரமுடிஞ்சது.  சென்னையில இன்னைக்கு டிஸ்கவரி புக் பேலஸ்- ஒரு தவிர்க்க முடியாத புத்தக கடையா மாறி இருக்குனா அதுக்கு காரணம் நிச்சயமா பதிவர்கள்தான்னு உறுதியா சொல்வேன். வருகைத் தரும் ஒவ்வொரு பதிவர்களையும் நான் ஆவலோட எதிர்பார்ப்பேன். அவர்களோடு தொடர்ந்து நல்ல நட்பை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். 

அதேபோல் இதுவரை எந்தப் பதிவர்களும் யாரும் தவறாக ஒரு வார்த்தை பேசி நானும் பார்த்த்தில்லை. அந்த வகையில் உண்மையில் பதிவர்கள் அன்பு என்ற கயிற்றில் ஒற்றுமையாக காயும் உப்புக்கண்டம் எனலாம். அதனால் சாதாரண இதை பதிவர் சந்திப்புனு சொல்லிட முடியாது. நமது நலம் விரும்பிகளை ஒரு நாள் நமது வீட்டுக்கு அழைப்போம் இல்லையா..அப்படியே!
   
தவிர்க்கவே முடியாத காரணத்தால்தான் மே 13.ம் தேதி நாம் டிஸ்கவரி புக் பேலஸ்-ல் பதிவர் சந்திப்பு நடத்த  முடியாமல் போனது. அதன் பிறகு கே.ஆர்.பி வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும்போது நான் முடிந்த அளவு முயற்சிக்கிறேன் என்றேன், 13 அம் தேதி அன்று புத்தக விமர்சனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் முடியாது என்றும், பத்திரிக்கைகளுக்கெல்லாம் தகவல் சொல்லிவிட்டோம் என்றும் சொன்னார்கள், துயரமான முடிவுகளைக் கொண்ட காதல் படங்களின் கடைசிக்காட்சியில் காதலனின் கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிப் போகும் காதலியைப் போல  கே ஆர் பியை நான் பிரிந்து விடை பெறும்போது எல்லையில்லா ஏமாற்றத்தோடு இந்தமுறை நாம் பதிவர்களை தவறவிட்டுவிட்டோம் என்று நினைத்தேன். அதோடு அதே 13.ம்தேதி நமக்கும் நிகழ்ச்சி இருப்பதால் குறைந்தபட்சம் கூட்டத்தின் ஒரு மூலையில் நின்று கைவிடப் பட்ட காதலனைப்போல ஒரு வாய் காஃபி தண்ணிகூட குடிக்கமுடியாமல் போய்விட்டதே என்று ஏங்கினேன்.  என்ன ஆச்சரியம்?  5 வருடம் கழித்து என்று டைட்டில் கார்டு போட்டு சேர்த்து வைத்து காதலைக் காப்பாற்றும் இயக்குநர்களைப் போல ஒரு வகையில் நாம் ஒரு வாரம் கழித்து சேர்ந்து இருக்கப் போகிறோம் என்று நினைக்கும் போது  நமக்கான பந்தம் ஏழேழு ஜென்மத்திற்கும் நிலையானது.. அய்யோ அம்மா..  மன்னிச்சுக்குங்க, என்னைக்கும் நிலையானது:    

தோழமையுடன்!
வேடியப்பன்.