ஐந்தாறு வருடத்திற்கு முந்தைய என்னுடைய எல்லா நண்பர்களுக்குமே டீ கடை அண்ணாச்சியைத் தெரியும். அவர்களை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் பேச்சுக்கிடையில் நான் ஒன்றை திரும்பத் திரும்ப சொல்லிவைப்பேன். “டீ கடை அண்ணாச்சிய எங்கேயாவது பாத்தா எனக்கு பேசச்சொல்லு, என் போன் நம்பரக் கொடு” -என்பதுதான்.
இந்த உதவியை நீங்களும்கூட செய்யலாம். திரைப்பட உதவி இயக்குனரான எனது வேளைகளுக்கிடையில் அடிக்கடி அண்ணாச்சியின் ஞாபகம் வரக் காரணம், நான் அவருக்கு தரவேண்டிய கடன் பற்றிய ஒரு குறிப்புதான். சரியாக இன்றுடன் நான்கு வருடம் பத்துமாதம் என்று நினைக்கிறேன். தொல்லாயிரத்து முப்பது ரூபாய் என்று அந்த தொகை பற்றி எனது நாட்குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
அவரை என்றேனும் ஒருநாள் நிச்சையம் சந்திப்பேன் என்பதற்கு எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே ஆதாரம். ஒரு வேளை நீங்கள் யாரேனும் அண்ணாச்சியைக் கண்டுபிடித்து கொடுக்க முன்வந்தால் மன்னிக்கவும். இதற்கு அது உங்களால் முடியாது என்று அர்த்தமல்ல, பழைய நகைசுவை நடிகர் சுருளிராஜனின் இளம் வயது தோற்றம்போல இருக்கும் அண்ணச்சியை யார்வேண்டுமானாலும் கண்டுபிடித்துவிடலாம்தான். ஆனால் உண்மையில் அவரை சென்ற வாரத்தில் நானே எதேச்சையாக இதே கோடம்பாக்கத்திலேயே சந்தித்து முகவரியையும் கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு கதைக்கான தொடக்கமே உங்களின் கவனத்தை ஈர்த்து தன்வயப்படுத்திவிடவேண்டும் என்ற சினிமா இலக்கணத்தில் சிக்கிக்கொண்டிருப்பதால் தொடங்கிய ஒரு தொடக்க ஆலாபனையே அன்றி வேரில்லை...
சரி.... முன்பே ஒன்றை சொல்லிவிடுகிறேன். நான்கு வருடத்திற்கு முந்தைய டீ கடை அண்ணாச்சியை பற்றிய கதை என்பது பயங்கர ஆச்சரியங்களும், திடீர் திருப்பங்களும் நிறைந்த ஒன்றல்ல. தெருவுக்கு நான்கு டீ கடை முளைத்துவிட்ட சென்னை நகரில், நான்கில் ஒரு கடை நொடிந்துபோவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அப்படி நொடிந்துபோனதுதான் அண்ணாச்சியின் டீ கடையும். அதுவும் கோடம்பாக்கம் வடபழனி போன்ற சினிமாக்காரர்கள் நிறைந்த பகுதிகளில் இது சகஜமாகக்கூட இருக்கலாம். அதேசமயம் டீ கடை வைத்து சம்பாதித்து ப்ளாட் வாங்கி பெரிய அளவில் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.
"ராம் தியேட்டர் எதிர்ல, கங்கையம்மன் கோவில் தெரு இருக்கு, அதுல நேரா வந்தா.. வலப்பக்கம் ஒரு மெடிக்கல் இருக்கும். அது பக்கத்தில புதுசா ஒரு டீ கடை. டீ கடைய ஒட்டி போற சந்தில திரும்பனா மூணாவது வீடு. பழைய நம்பர் பத்தொன்பது"- இதுதான் நண்பன் சொன்ன அவனது வீட்டு முகவரி. அவன் சொன்ன முகவரியில் வரும் புது டீ கடைதான் அண்ணாச்சியின் டீகடை. நண்பனை பார்க்கப்போகும் ஒவ்வொரு நாளும் என்னிடமிருந்து குறைந்தது ஐந்து ரூபாயையாவது அந்த டீ கடை குடிக்கத் தொடங்கியது.
அண்ணாசியின் டீ கடையில் ஒதுங்கும் எத்தனையோ பேர்களில் நானும் எனது சைக்கிளும், நண்பனும் தவிர்க்க முடியாதவர்கள். அவரும் கடைவைத்து சில நாட்கள்தான் ஆகிறது. எல்லோரையும் மனதில் வைத்துக்கொண்டு, ஆட்களைப் பார்த்ததும் அவர்களுக்கு தேவையானவற்றை புரிந்து, சரியான கலவையில் அரை தம்ளர் டீயும் கால் தம்ளர் நுரையுமாக முழுமனதோடு கொடுக்கும் முக்கா தம்ளர் டீயுடன் “சார்..’’ என்ற அழைப்பு ஒரு நொடி எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிடும். “சார்’ என்ற ஒற்றை சொல்லுக்கு எங்களுக்குள் அங்கு ஏக கிராக்கி.
நான் டீ கடைக்கு போகத் தொடங்கிய ஒருவாரத்திற்கு பிறகும் அவரின் பெயர் என்ன எற்றுகூட தெரியாது. பலருக்கு மாஸ்டர், எங்களுக்கு அண்ணாச்சி. புதுக்கடை என்பதற்காக இல்லை, அவரின் இயல்பே யாரிடமும் முகம் சுழிக்காததுதான். தொழில் நுனுக்கம் என்றாலும் தப்பில்லை. புதுக்கடை என்பதால் நான் உட்பட அங்குவரும் இன்னும் சிலரும் தங்களுக்கு தெரிந்த உபதேசங்களை ஊதிவிட்டனர். இதை உபதேசங்கள் என்பதுகூட தவறுதான். ஒரு டீக்கடை என்றால் அதற்கான ஆடை அலங்காரங்களைப் போல பண்ணும்-வடையும்-பிஸ்கெட்டும்- பேப்பர் இத்யாதிகளும் அடங்கியதுதானே, நாங்கள் சொன்னதும் அண்ணாச்சி செய்ததும் அதையேதான்.
அண்ணாச்சி கடையில் பிறகு வாழைபழம் கூட கிடைத்தது. புதிதாக ஒரு பையனும் வேலைக்கு சேர்ந்திருந்தான். தினசரி பத்திரிக்கைகளோடு மாலை பத்திரிக்கையும் கிடைத்தது. உபதேசம் இதோடு நின்றபாடில்லை. மாலையில் போண்டாவும் பஜ்ஜியும் போடச்சொன்னோம். இரண்டுமாத உபரியில்லாத அவரின் வியர்வை மீண்டும் முதலீடானது.
டீ கடையின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையினர் சினிமாவை சார்ந்தவர்களே. அனைவருமே தினம் ஐந்து ரூபாய் டீ கடை கணக்கில் செலவழிக்கும்படியான நிரந்தர நிகர வருமானமற்றவர்கள் என்பது அண்ணாச்சியும் அறிந்ததே. ஆனால் இவர்களின் யோசனைதான் டீக்கடை விரிவாக்கத்திற்கு உதவியதென்றால் தவறில்லை.
அண்ணாச்சியின் தொழில் விருத்திக்கு பிறகு அது ஒவ்வொருவர் பாக்கெட்டிலிருந்தும் குறைந்தது பத்து ரூபாயை எதிர்பாத்தது. இருந்தால்தானே.. அப்படியும் சில நாள் இருக்குமேயானால் அது அண்ணாச்சி தினந்தோறும் காலையில் படிக்கும் ராசிபலன்களின் அனுகூலமேயன்றி வேரில்லை.
புதியவர்களை வரவேற்பதும், அவர்களை வசியப்படுத்தும் ஒரு புன்னகையை உதிர்ப்பதும் அண்ணாச்சியின் தேவையாயின. முன்பே போடப்பட்ட பென்ச்டன் இரண்டு ப்ளாஸ்டிக் ஸ்டூலும் சேர்ந்துகொண்டன. போண்டா பஜ்ஜிக்கு சட்ணியும் சேர்ந்துகொண்டது கூடுதல் சிறப்பு என்று சொல்ல முடியாது, ஏனென்றால் சற்று தள்ளியுள்ள எல்லா கடைகளிலும் அவை தேவைக்கேற்ப கிடைத்தது.
நண்பனை சந்திப்பதற்கும், அவனை வீடுவரை விடுவதற்கும் என்ற எனது பயணத்தில் அண்ணாச்சி கடையின் புது இஞ்சி டீயும் சேர்ந்துகொண்டது. என் சார்பிலும்கூட சில புதிய வாடிக்கையாளர்கள் அங்கு வந்துபோனார்கள். கவனிக்கவும், இதுவரை எல்லாமே சாதாரனமாகவே நடந்துகொண்டிருக்கிறது.
டீ கடைக்கு ஆட்கள் அதிகமாக வரத்தொடங்கினர். அண்ணாச்சியும் தேவையற்ற பேச்சையும் சிரிப்பையும் குறைத்துக்கொண்டு வியாபாரத்தில் பரபரப்பானார். கொஞ்ச நாளாவே கல்லாப்பெட்டியின் இருப்பு அவருக்கு பெரும் நிறைவைத் தந்தன.
பிறகுதான் கவனித்தேன். இருவர் டீ குடித்துக்கொண்டே சினிமா கதை பேசினர். அண்ணாச்சி அவர்களை வியப்பாக பார்த்தார். அவர்களிடமிருந்து சில நாளில் நான்கு டீ- நான்கு சிகரெட் வாங்கியதிற்காக ஐந்நூறு ரூபாய் நோட்டாக வரும். அவர் திக்குமுக்காடிப்போவார். பக்கத்து கடைகளுக்குபோய் சில்லறை மாற்றிக்கொண்டு ஓடி வருவார். அவர் திருப்பிக்கொடுக்கும் சில்லறையை ஒரு கையில் டீ தம்ளரை பிடித்தபடி, வாயிலும் மூக்கிலும் புகையை ஊதிக்கொண்டே.. இடக்கையால் பணத்தை வாங்கி எண்ணிகூட பார்க்காமல் அப்படியே பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்கள். இது அவர்களின் வெட்டி பந்தா என்று புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் அண்ணாச்சிக்கு அப்போதில்லை.
பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களில் சிலர், சூழலுக்கு சற்றும் தொடர்பில்லாத விசயத்தைப் பேசுகிறார்கள், அல்லது பேச்சுக்கிடையில் என்றோ நின்றுவிட்ட பழைய விசயத்தை கிண்டுகிறார்கள். அருகில் சிகரெட் பழக்கமற்றவர்கள் இருக்கக்கூடும் என்ற கவனமற்று, காற்றுவாக்கில் அவர்கள் முகத்தில் புகையை ஊதிவிட்டு எரிச்சலூட்டுகிறார்கள். சிகரெட் பிடிப்பவர்கள் பற்றிய அண்ணாச்சியின் கண்டுபிடிப்புதான் இவையெல்லாம். ஆனாலும் “சார் சிகரெட்..?” –என்ற அண்ணாச்சியின் கேள்வியில் ஒரு வசீகரம் தொணிக்கும். வேறு வழியில்லை, வேறு வழியில்லை என்பது சில நேரம் பணமில்லை என்பதையும் குறிக்கும். கடைசியாக காளியான சிகரெட் அட்டையில் எனக்கான கடன் பதியும். அதில் சரிபாதியாய் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருப்பது நண்பனுக்கானதும், அல்லது அவன் எனக்கு வாங்கிக்கொடுத்தாலும் அவை என் கணக்கிலேயே பற்றுவைக்கப்பட்டு இறுதியில் நானே கட்டித்தொலைக்க வேண்டியதும்.
சினிமாக்காரர்களின் வரவும் நெருக்கமும் கூடக்கூட அண்ணாச்சியின் கற்பனை சிறகு முளைக்கத் தொடங்கியது, அந்த சிறகு ஒரு திடகாத்திரமான ரெக்கையாக மாறியபின் பறத்தல் மற்றும் பறத்தல் நிமித்தமாக சில நேரம் வேலையை மறந்து பிரம்மையாக நின்றுவிடுவார். இந்த இடைவெளியில் அவர் திரையரங்குகளின் கூரைகள் மீது தாவித்தாவி அமர்ந்து ஒரு குட்டித் தூக்கம் போட்டு விழித்திருப்பார். அந்த கனனேர தூக்கத்தினூடாக திரையரங்கின் வெண் திரையில் தோண்றி டீ ஆற்றுவதாகவும், திரையின் கீழ் விளிம்பிலிருந்து மேல் விளிம்புவரை தான் ஆற்றும் டீயின் ஓடுபாதை சர்ர்ர்ரென்று ஓடி, அடுத்த ஷாட்டில் தம்ளரில் நிரம்புவதாகவும், அந்த டீயை எடுத்து ஹீரோ குடிப்பதாகவும் ஒரு கனவுபோல உருபோட்டுக்கொள்வார். சில நேரம் இதையே மாற்றி யோசிப்பார். டீ குடித்துவிட்டு காசு கொடுக்காமல் போகும் ஒரு வில்லனின் முகத்தில் சூடான டீயை ஊற்றி, கடையிலிருந்தே எகிறிச் சுழன்று வில்லனின் முகத்தில் உதைக்க, அவன் தப்பித்து ஓடிவிடுவான்.
ஒரு டீ கடையை மையமாக வைத்து இதைத்தவிர வேறெதுவும் யோசிக்க முடியாத அளவு அண்ணாச்சியும் சரி, தமிழ் சினிமாவும் சரி வளர்ச்சியடையாத சூழலில் அவரின் இந்த கற்பனை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பல வருஷம் சினிமாவில் வேலை செய்த பிறகு ஒரு இயக்குனர் யோசிப்பதை சிலனொடி கேப்பில் அண்ணாச்சியாலும் யோசிக்க முடிகிறதென்றால்.. பார்த்துக்கொள்ளுங்கள். அதோடு டீ குடித்துவிட்டு கதைபேசும் சிலர் “நம்ம அண்ணாச்சி மாதிரி ஒரு கேரக்டர்...”- என்று அவரையே உதாரணத்துக்கு இழுத்ததும்கூட அவருக்கு சிறகு முளைக்கும் காரணிகளாகின.
என்னுடையது போலவே, மற்றவர்களுடைய கடனும் காலியாகும் சிகரெட் அட்டையை நிரப்பிக்கொண்டு மீண்டும் பணக்கட்டுகளைப்போல உள்ளேயே பதுங்கிவிடும். ஒரு நாள் இரவு கடன் அட்டைகள் மொத்தத்தையும் எண்ணிப்பார்த்த அண்ணாச்சிக்கு தூக்கிவாரிப்போட்டது. மொத்தம் எழாயிரத்தை தாண்டியது. அதன் பிறகு அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. எப்படியாவது யாருக்கும் நோகாமல் கடனை வசூலித்துவிட வேண்டும் என்ற திட்ட்த்தோடு மறுநாள் கடயைத் திறந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் அண்ணாச்சிக்கு ஒரு சந்தோஷமான செய்தியை நண்பன் ஒருவன் சொன்னான். சினிமாக்காரர்களின் அதிக பழக்கமும், அவர்களுக்கு சக்திக்குமீறி விட்ட கடனுக்குமாக சேர்த்து ஒரு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தேவிட்டது. அதுவும் வியாபாரதுக்கு இடையில் அவர் கண்ட அதே பகல் கனவுபோலவே, டீ மாஸ்டராகவே நடிக்கும் வாய்ப்பு. இங்கு செய்வதையே அங்கும் செய்துவிட்டால் போதும் என்பதால் ஒத்திகை எதுவும் பார்க்கும் சிரமத்தை தவிர்த்த கூடுதல் சந்தோஷம் வேறு அண்ணாச்சியை ஜென்மபலன் அடைந்த நினைப்பில் மிதக்க வைத்தது.
இதனால் இனி யாருக்கும் கடன் இல்லை என்ற அண்ணாச்சியின் உறுதியான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் பழையமுறையே அமுலானது. சினிமாவில் அவருக்கு நடிப்பு வாய்ப்பு கிடைத்தது என்பது, சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட சரியான வாய்ப்பு. அதாவது “உடுக்கை இழந்தவன் கைபோல”_என்ற திருக்குறளுக்கு இணையான உதவி. அதனால் நண்பனுக்கு ஒரு சபாஷ்!
படப்பிடிப்பிற்கு முதல் நாள் இரவு எல்லோருக்கும் அண்ணாச்சி ஒரு விருந்து கொடுத்தார். விருந்தில் கலந்துகொண்ட அனைவருமே அவரின் கடன் அட்டைதாரர்கள் என்று சொல்ல முடியாது. சிலர் எதிர்காலத்தில்தான் அந்த கணக்கில் சேருவார்கள்.
படப்பிடிபிற்கு அண்ணாச்சி ஆட்டோவில் வந்திரங்கினார். பரபரப்பாக நடந்த படப்பிடிப்பிற்க்கு இடையில் அண்ணாச்சியின் காட்சி படமாக்குவதற்கான நேரம் வந்தது. பாரம்பரியமான ஸ்டுடியோவின் பிரமாண்டத்தையும், செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த கடைவீதியையும் பார்த்த பிரமிப்பிலிருந்து திடுக்கிட்டு விடுபட்ட அண்ணாச்சி நொடிப்பொழுதில் தயாரானார்.
அதே டீ ஆற்றும் வேலைதான் என்றாலும் ஒரே ஆறுதல்- பெரிய ஆறுதல் டீ குடிக்கும் பெண்தான். நகரத்து நவநாகரிக யுவதி, இதுவரை அவரது டீ கடையில்கூட அப்படியொரு பெண் டீ குடித்ததாக அவருக்கு ஞாபகம் இல்லை. ஆனால் சினிமாவில் மட்டும் எப்படி...? நண்பனிடம் கேட்டேவிட்டார். நண்பனும் “அதுதான் சினிமா, தோசைய திண்ணு.. ஓட்டைய எண்ணாத..”- என்று ஒரு செம பஞ்ச் கொடுத்தார்.
அண்ணாச்சி அதற்குமேல் எதுவும் பேசவில்லை. டீ குடிக்கும் பெண் அணிந்திருந்த பனியனுக்கு வெளியே அவளது மார்பகங்கள் புடைத்துத் தெரிந்தன. அல்லது அவளது மார்பகங்களுக்கு ஏற்ற பனியனை அவள் போட்டுக்கொள்ளவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா? சரி.. விடுங்கள், நானும் சினிமாக்காரன்தானே...!
இந்த இடத்தில் எந்த நாகரிகமும் எடுபடாது என்பதை புரிந்துகொண்ட அண்ணாச்சி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கூடுமானவரை பெண்ணின் அழகையாவது ரசித்துவிடவேண்டும் என்று தீர்மானித்தார். படத்தின் இயக்குநர் கேமரா-ஸ்டார்ட் சொல்லி கட் சொல்லும்போது அந்த பெண் டீக்கான காசை நீட்டவேண்டும். இயக்குனர் கட் சொன்னபிறகு காசை வாங்கிய அண்ணாச்சி அதை தவறவிட்டார். காசை எடுக்க குணிந்த பெண்ணின் மார்பை பார்த்து பரவசமடைந்தார்.
இதை எப்படியோ பார்த்துவிட்ட ஒரு உதவி இயக்குனர் இயக்குனரிடம் வத்தி வைக்க, “இது நல்லாருக்கே... இப்படியே செஞ்சிடலாமே...”- என்று அந்த வாய்ப்பு அண்ணாச்சிக்கு ஐந்துமுறை நீட்டிக்கப்பட்டது. ஒருவேளை இதை “இதுதான் கமர்சியல் இயக்குநரின் சமயோசிதம்”- என்று எதிர்காலத்தில் திரைப்பட ஆய்வாளர்கள் கருத்து சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல!. ஒருவழியாக டேக் ஒகேயானதும் நண்பனுக்கு நன்றி சொன்ன அண்ணாச்சி அதன் பிறகு சொன்னதுதான் வேடிக்கையானது. “அந்த பொண்ணு என்ன ஒரு மாதிரி பாத்திச்சி. என்ன அதுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சி...” என்றார். அதுசரி..!
இந்த சம்பவத்திற்கு பிறகு அண்ணாச்சியிடம் மாற்றம் தெரிந்தது. சிலர் அவர் நடித்த படத்தின் பெயரையே அவருக்கு அடைமொழியாக்கி அழைத்தனர். சினிமாவைச் சேர்ந்தவர்களின் வரிசையான படையெடுப்பால் தனது கடை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து சிதைந்து கொண்டிருப்பதை அறியாத அண்ணாச்சி, லாங் சாட்.. க்லோஸ் அப்.. என்று பேசி சிரிப்பது மற்றொரு வேடிக்கையானது. இந்த வார்த்தைகள் அவரை உயரத்தில் தூக்கி வைத்து பேயாட்டம் போடவைத்தது. அதேசமையம் எந்தக் கவலையுமில்லாமல் கதை பேசுபவர்களின் குரல்கள் மட்டும் காற்றில் மோதி போண்டா வாசணையில் கரைந்துகொண்டிருந்தது. சில நாளில் வரும் ஐநூறு ரூபாய் நோட்டுக்காரர்களிடம் காசு வாங்குவதை தவிர்த்த அண்ணாச்சி, அதற்கு பதிலாக அவர்களிடம் நடிப்பு வாய்ப்பு கேட்க்கவும் தயங்கமாட்டார்.
இப்போதெல்லாம் யாரிடமும் அண்ணாச்சி கடனை உறுதியாக திருப்பி கேட்பதில்லை. அப்படியும் மீறி கேட்டால் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி பேச்சை மாற்றுவார்கள். அதனால் யார் வந்தாலும் “இவ்ளோ கடன் வரவேண்டியிருக்கு..”- சிரித்தபடியே சிகரெட் அட்டைகளை எடுத்துக்காட்டுவார். அவர்களும் “நம்ம பணத்தபத்தி கவலப்படாதிங்க அண்ணாச்சி, ஆனா எல்லோர்கிட்டையும் இப்படியே விட்டுடாதிங்க..” என்று சொல்வார்கள். கடனை சூசகமாக கேட்ட திருப்தி அண்ணாச்சிக்கும், அதனை புத்திசாலித்தனமாக மலுப்பிவிட்ட திருப்தி கடன்காரர்களுக்கும் என பார்வை முகத்தை பார்க்காமல் பலகாரங்கள் மீதே வழியும்.
நீண்ட யோசனைக்கு பிறகுதான் கடைப்பையனை நிருத்தினார். ஒரு வாரம் அவராகவே சமாலித்துப்பார்த்தார்.தோது வருவதாக இல்லை. புதிய ஆட்கள் வருவதும் குறையத் தொடங்கின. ஆனாலும் அங்கு சினிமாக்காரர்களின் வருகை குறைந்தபடில்லை. அண்ணாச்சிக்கு தெரியும். போண்டா பஜ்ஜி போடுவதை நிறுத்தினாலே இவர்களை நிருத்திவிடலாம் என்று, ஆனால் முடியாது. கடன்காரர்களை கடைக்கு வரவழைக்க இந்த பலகாரஙகள்தான் ஒரே வழி.
அளவுக்கு மீறி அரட்டையடிப்பதையும், அரை நாளைகூட சிலர் கடைவாசலிலேயே கழிப்பதையும் பார்க்கப் பார்க்க அவருக்கு கெட்ட சகுனமாக பட்டது. அதுவும் கொஞ்ச நாளாக புதுப்பட நாயகர்களைப்போல ஒருவர் நடித்துக்காட்ட, மற்றவர்கள் கைத்தட்டி ரசிக்க என்று டீ கடை பொழுது போக்கவும், அரட்டையடிக்கவும் என்று மாறிவிட்டது. நீங்களே சொல்லுங்கள், கழுதைகள் எவ்வளவுதான் குதூகலமாக இருந்தாலும் குட்டிச்சுவர் என்பது ஒரு குடும்பம் சிதைந்து போனதின் சுவடுதானே..?. டீ கடையும் அப்படியே.
கடைசியில் போண்டா பஜ்ஜி போடுவதையும் நிருத்திவிட்டார். எப்படிப் பார்த்தாலும் அந்த டீ கடையில் கடைசிவரையிலும் பொழிவு மாறாமல் இருந்ததென்றால் அது சிகரெட் பிடிப்பவர்களுக்காக எரிந்து கொண்டிருக்கும் சிறு விளக்குதான்.
சரி... அதன் பிறகு?.
அதன் பிறகு ஒன்றுமில்லை. நான் வேலை செய்யும் படத்தின் வெளிப்புறப் படப்பிடிபிற்காக கிட்டத்தட்ட ஒருமாத காலம் மூணாறு, கொடைக்கானல் என கழிந்தன. அதன் பிறகும் அங்கிருந்து ஊருக்கு சென்று ஒருவாரம். அண்ணாச்சிக்கு தரவேண்டிய எனது கடன் தொகையான தொல்லாயிரத்து முப்பது ரூபாயோடு சென்னையில் இரங்கினேன். கடனை திருப்பிக் கொடுத்தவுடன் குடிக்கும் முதல் டீயிலேயே அடுத்த கணக்கை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற முடிவோடுதான் அண்ணாச்சி கடைக்கு போனேன்.
அந்த இடத்தில் ஒரு பெட்டிக்கடை முளைத்திருந்தது. ஒரு கணம் எதிர்பார்க்காத அதிர்ச்சியாய் இருந்தாலும், மறுகாணமே “இது எதிர்பார்த்த அதிர்ச்சிதாண்டா மொக்க..”- என்று என் மனமே என் மண்டைமீது சுத்தியலை கொண்டு அடித்து ஞாபகப்படுத்தியது.
நண்பன்தான் சொன்னான். கடைசி நாளான அன்று டீ தம்ளர்களையும், பாய்லரையும் பழைய பொருட்களுக்கான கடையில் போட்டிருக்கிறார். கடன் அட்டைகளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, ஸ்டூல்களையும் சில பொருட்களையும் பக்கத்து கடையில் விற்றிருக்கிறார். “கவலைப்படாதீங்க அண்ணாச்சி, நீங்க நடிச்ச படம் தீபவளிக்கு ரிலீஸாகிடும். உங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்”- என்ற நண்பனின் சமாதானம் எடுபடவில்லை. “என் கடன் எப்போ வரும்” என்று திரும்பத் திரும்ப கேட்டு புலம்பியிருக்கிறார். நண்பனால் எதுவும் பேச முடியவில்லை.
அன்று முழுதும் காலியான கடைவாசலிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்திருக்கிறார். அப்போதும் நண்பன்தான் ஓடிப்போய் டீயும் பண்ணும் (மற்றொரு கடையில் வைக்கப்பட்ட கடனாக இருக்கலாம்) வாங்கிவந்து சாப்பிடவைத்து அனுப்பி இருக்கிறான்.
எங்கு சென்றிருப்பார்?, யாருக்கு தெரியும். எல்லோரையும்போல ஊருக்கு போயிருக்கலாம். நானும் அப்படிதான் நினைத்திருதேன்.
“சார்...!”
சென்ற வாரம் கோடம்பாக்கத்தில் பார்த்ததாக சொன்னேனே, அப்போது கேட்ட குரல். பழக்கப்பட்ட அதே அண்ணாச்சியின் குரல். சென்னையில்-கோடம்பாக்கத்தில் எப்படி?.
ஆச்சரியமா இருக்கு?- நானும் விடாமல் சமாளித்தேன்.
“நான் இங்கதான் சார் இருக்கேன், உங்களத்தான் பாக்க முடியல...” இருவரும் ஒருனொடி உற்று பார்த்துக்கொண்டோம். மனக்கிளி வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடன் அட்டைகளை கொத்திப்புரட்டி, இறுதியில் தொள்ளாயிரத்து முப்பது ரூபாய் என்றிருந்த எனது அட்டையை எங்கள் இருவருக்கும் இடையில் தூக்கிப்போட்டது.
நான் வெளிப்படையாகவே பேசிவிட நினைத்தேன். ஆனால் இப்போதே “இந்தா.. பிடி”-என்று கடனை எடுத்து நீட்டிவிட முடியாத சூழல், இந்த ஆண்டும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. “அப்போ நாளைக்கு முடியுமா?”-எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். முடியாது. அடுத்த வாரம்? முடியும். இதைத்தான் நான் நினைத்ததும்-அவரிடம் சொல்ல முயற்சித்ததும். அண்ணாச்சி எதையும் காதில் வாங்கும் தன்மையில் இல்லை.
ஆரம்பத்திலிருந்தே கவணித்தேன். ஆண்ணாச்சியின் கையில் பத்திரமாக மடித்து பாதுகாக்கப்பட்ட ஒரு காகிதப்பையை கைகளில் மாற்றி மாற்றி பிடித்துக்கொண்டிருந்தார். நான் கவனிப்பதை உணர்ந்ததும் சட்டென பையிலிருந்து ஒரு புகைப்பட தொகுப்பை எடுத்து நீட்டினார். புரிந்துவிட்டது. அண்ணாச்சியின் விதவிதமான புகைப்படங்கள். ஒவ்வொரு புகைபடத்தின் பின்னாலும் அவரின் முகவரிவும், போன் நம்பரும் எழுதியிருந்தது.
நான் அவரிடம் எதையும் அதிகமாக அங்கு விசாரிக்காமல் என் முகவரியை கொடுத்தேன். கண்டிப்பாக அடுத்த வாரம் வரும்படியும், அப்போது அவருக்கான கடனை கொடுத்துவிடுவதாகவும் சொன்னேன்.
“காசு வேணாம் சார்.... எனக்கு நல்ல வாய்ப்பு குடுத்தா போதும் சார்”- என்றார். அவர் உறுதியாக சொன்னார். நானும் உறுதியளித்தேன். இன்று மட்டும் இதுபோல் இன்னும் சிலருக்கு இப்படி உறுதியளித்திருக்கிறேன்.
மிக அருமையான கதை வேடியப்பன் நல்ல கதை சொல்லும் திறமை இருக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete//நண்பனை பார்க்கப்போகும் ஒவ்வொரு நாளும் என்னிடமிருந்து குறைந்தது ஐந்து ரூபாயையாவது அந்த டீக்கடை குடிக்கத்தொடங்கியது.//
ReplyDeleteவேடியப்பன்,
டீ காசு குடிக்கிற விசயத்த நீ சொல்லித்தான் சாமி தெரிஞ்சிக்கிட்டேன்.
நமக்கு டீ கடைப் பக்கம் ஒதுங்குற பழக்கம் இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம்.சரி விடுங்க, இப்ப அதா முக்கியம்?
//நீங்களே சொல்லுங்கள், கழுதைகள் எவ்வளவுதான் குதூகலமாக இருந்தாலும் குட்டிச்சுவர் என்பது ஒரு குடும்பம் சிதைந்து போனதின் சுவடுதானே..?. //
ReplyDeleteவேடியப்பன்,
குட்டிச்சுவர் என்பது வெட்டி இடம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதுக்கும் இப்பிடியொரு அர்த்தம் கற்பிச்சுட்டீங்க.ம்ம்ம்ம்ம்..!
(எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களில் இப்படியான வாழ்வியல் இலக்கணம் இருக்கும்)
//டீ குடிக்கும் பெண் அணிந்திருந்த பனியனுக்கு வெளியே அவளது மார்பகங்கள் புடைத்துத் தெரிந்தன. அல்லது அவளது மார்பகங்களுக்கு ஏற்ற பனியனை அவள் போட்டுக்கொள்ளவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா..? //
ReplyDeleteவேடி,
சினிம்மாக்காரன் சினிமாக்காரன் தான்யா.
//அவளது மார்பகங்களுக்கு ஏற்ற பனியனை அவள் போட்டுக்கொள்ளவில்லை. //
ஏற்ற பனியனை போட்டுக்கொள்ள டைரக்டர் அனுமதிக்கவில்லை என்பதே சரி.
ஒரேயொரு கேள்வி.
ReplyDeleteஅண்ணாச்சி கதாபாத்திரத்தின் உண்மை நிலை என்னாச்சி?
வேடி,
ReplyDeleteபடத்துல இருக்கிறது “டீக்கடை அண்ணாச்சி”யா?
வித்தியாசமா இருக்கு
ReplyDeleteசினிமா பார்க்கிற மாதிரி இருந்தது!
ReplyDeletenalla flow , superb sir !
ரொம்ப அருமையா இருந்தது நண்பரே
ReplyDeleteபடிக்க படிக்க அப்படியே கதைக்குள்ள இழுத்துகிட்டு போயிடுச்சு.
தங்கள் விமர்சனத்திற்கு நன்றி
ReplyDeleteஒரு மானுடனின் கனவு வாழ்க்கை கணக்கு பிசகிய வீயாபாரம்
ReplyDeleteஉதவி இயக்குனர்களின் சமயோசிதம்
அண்ணாச்சிக்கு தரவேண்டிய கடன் பற்றிய நீனப்பு ....அருமை
வசனங்கள் இல்லாத உரை அமைப்பில் கதை
மௌனினியின் கதைகள் ஆதவன் கதைகள் படித்தது உண்டா வேதி அப்பன் ?
சில கதைகள் படித்துள்ளேன்.
Delete