நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Thursday, December 1, 2011

சீனுராமசாமியின் “காற்றால் நடந்தேன்”-கவிதை தொகுப்பு குறித்து!

உயிர்மை-100
  உயிர்மையின் 100 வது இதழ் நேற்று (01/12/2011) தேவனேயப் பாவாணர் அரங்கில் நடந்தது. திட்டமிட்டபடியே அரங்கு நிறைந்த காட்சி என்பதுபோல அரங்கு நிறைந்த இலக்கியக் கூட்டமாக இருந்தது. உயிர்மையின் 100 வது இதழ் மிகவும் இலக்கிய ரசனையுடன் வெளிவந்துள்ளது. ஒரு படைப்பாளியிடம் ஒரு கேள்வி என, 100 படைப்பாளிகளிடம் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த 100 கேள்விகளும்,  அதற்கான படைப்பாளர்களின் பதிலும்  இதழை  அவசியம் பாதுகாக்க வேண்டிய இதழாக மாற்றியுள்ளது எனலாம். சில புதிய படைப்பாளர்களையும் முக்கிய படைப்பாளர்களாக இதில் அங்கீகரித்துள்ளனர்.

காற்றால் நடந்தேன்
    தொடர்ந்து  இயக்குநர் சீனுராமசாமியின்  காற்றால் நடந்தேன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா நடந்தது.  அர்த்தமுள்ள கவிதை  வரிகளை பவா செல்லதுரை, நடிகர் விவேக் போன்றவர்கள் சுட்டிக்காட்டி பேசும்போது  அரங்கில் அடிக்கடி கைத்தட்டல்களையும் காண முடிந்தது. நீண்ட நாளைக்குப் பின் கைத்தட்டல் வாங்கிய கவிதைதொகுப்பு வெளியீட்டு விழா இதுவாகத்தான் இருந்தது எனலாம்.
1 கோணம்

                  கரும்புக் காடு எரியுது
                  கரும்புக் காடு எரியுது

                  பதறிய மக்களின்
                  நடுவே செய்வதறியாது
                  சீனிப் புகையாக
                  கரும்பின் நறுமணம்
                  அவ்வெளியெங்கும்
                  திகைத்து நின்றது”

2. இணைபிரிவு

 கிழிந்த ரவிக்கையின்
மீதேறி இணைவை
அழுத்துகிறது
தையல் எந்திர ஊசி

சொற்கள் உடைந்து
பிளவுபட்ட தருணத்தில் 
பிரயோகிக்கப் பட்ட
நிகழ்வை மறைத்தபடி
படபடக்கின்றன
அதன் றெக்கைகள்!

3.ஒளிரும் உருவம்

                இராமேஷ்வரம் கடலைப் பார்த்து
                சதா குறைத்துக்கொண்டிருக்கிறது 
                ஒரு எல்லையோர நாய்

                ஒரு வேளை அதன்
                ஒளிரும் கண்களுக்குத்
                தெரிந்திருக்கக் கூடும்

                வசிப்பிடமின்றிக் கடலில் அலைந்து
                கொண்டிருக்கும்  உருவமற்ற
               எம் மக்களை!


இப்படி தொகுப்பு முழுக்க மெண்மையான, சிந்தனையைத் தொடும் கவிதைகள் நம்மை ஒரேமூச்சில் தொகுப்பை வாசிக்க வைக்கிறது. கவிதையைக் கண்டாலே காத தூரம் ஓடும் சூழலில் நம்மை கவிதையின் பக்கம் திரும்ப வைத்துள்ளார் கவிஞர் சீனுராமசாமி என்று துணியலாம்.  என்னைக் கேட்டால்,   நானும் கவிதை எழுதுகிறேன் என்று கவிதைத்தளத்தையே கருணையின்றி சிதைத்துக் கொண்டிருக்கும் புற்றீசல் கவிஞர்களுக்கும், பத்துமுறை படித்தபின்தான் கவிதையின் முதல் வரிக்கு ஒருவாறு அர்த்தம் புரியும்படி எழுதிவிட்டு,  மொத்த கவிதை உலகின் குத்தகை தாரர்களாக காட்டிக்கொள்ளும் அதிநவீன கவிஞர்களுக்கும் “காற்றால் நடந்தேன்” கவிதைத் தொகுப்பை  பாடமாக்கலாம் என்பேன்

 வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கம்  : 102
விலை : ரூ.80

(டிஸ்கவரி புக் பேலஸ்-ல் கிடைக்கிறது
தொடர்புக்கு= 9940446650)

2 comments:

  1. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதுபோல,

    இங்கே குறிப்பிட்டுள்ள கவிதையே தொகுப்பின் அம்சத்தை காட்டுகிறது

    ReplyDelete
  2. அருமை.. வேடியப்பன்.. வாழ்த்துக்கள் சீனு ராமசாமிக்கு..

    ReplyDelete