நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Saturday, September 21, 2013

சினிமா நூற்றாண்டு விழாவினை துவக்கி வைத்து பேசிய முதலமைசர் ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதை!



“ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால், நரகப் படுகுழி என்கிற கிணற்றில் விழுந்து விட்டார். அந்த கிணற்றில், ஏற்கெனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

அந்தக் கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப் பார்த்தார் அந்த மகான். மகானை பார்த்தவுடன், அந்த மனிதர், “சுவாமி! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தினார். அந்த மனிதரைப் பார்த்ததும், மனித சமுதாயத்திற்கு அந்த மனிதர், என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விவரம் மகானின் கண் முன்னே தெரிந்தது. இருந்தாலும், அந்த மனிதரைக் காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார்.

ஏதாவது ஒரு நல்ல காரியத்தை அந்த மனிதர், தனது வாழ் நாளில் செய்திருக்கிறாரா என்று பார்த்தார். ஒரு சமயம், அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை, தன்னை அறியாமல், மிதிக்காமல் தாண்டி போயிருந்தது தெரிய வந்தது. இந்தச் செயலுக்காக,

அந்த மனிதரை கரையேற்ற முடியுமா என்று சிந்தித்தார். உடனடியாக, அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து, நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூல் இழை, கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போயிற்று. உடனே அந்த மகான், கிணற்றில் இருந்த மனிதரைப் பார்த்து, “இந்த நூலைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வா” என்றார்.

இதற்கு அந்த மனிதர், “சிலந்தி நூல், என்னைத் தாங்குமா?” என்று கேட்டார். “எல்லாம் தாங்கும். அதைப் பிடித்து வா” என்றார் மகான். சந்தேகத்துடனேயே அந்த நூலிழையை பிடித்து இழுத்துப் பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வலுவாக இருந்தது. எனவே, அதைப் பிடித்துக் கொண்டு மெதுவாக ஏறி வர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன், அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குனிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும், அந்த நூலிழையை பிடித்துக் கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள். உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டிவிட்டார். இனிமேல், தான் மட்டும் மேலே ஏறிவிடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அந்த மனிதரும் பொத்தென்று கீழே விழுந்துவிட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். ஏற்கெனவே தன்னை அறியாமல், அந்த மனிதர் செய்த ஒரு நற்செயல், அந்த நூலிழைக்கு உறுதியைக் கொடுத்தது. இப்போது அவர் செய்த பாவம் அந்த நூலிழையை வலுவிழக்கச் செய்துவிட்டது. அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால், அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. எனவே அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் அந்த மனிதர். திரைப்படத் துறையால், தானும், தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள்” என்றார்.

Friday, August 23, 2013

லுங்கி ( சிறுகதை )



                                        லுங்கி ( சிறுகதை )
                        
                                         பாரதி கிருஷ்ணகுமார்



 
அப்பாவுக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது. அதற்கு ராமரோ, பாபரோ காரணமல்ல. அப்பா புதிதாக வீடு கட்டுகிறபோது, தெருவை மறித்து, சாக்கடையை அடைத்து அட்டூழியங்கள் செய்தபோது, சித்திக் பாய் தான் அதைக் கண்டித்தார். வேறு யாராவது நியாயம் கேட்டிருந்தால், அப்பா மல்லுக்கு நிற்பார். அல்லது அப்போதைக்கு மௌனமாக இருந்து விட்டுப் பிற்பாடு தனது “ஆட்களிடம்“ சொல்லி நியாயம் கேட்ட ஆளை ஒரு வழி பண்ணி விடுவார். சித்திக் பாய் அப்படி ஏதுவும் செய்ய இயலாத தோற்றத்தில் இருந்தார். அவரது உடையும், தாடியும் வெண்மையில் ஒன்றோடொன்று போட்டி இட்டது. இளஞ்சிவப்பு நிறமும், கருணை ததும்பும் கண்களும், கன்னங்கரிய கூட்டுப் புருவங்களும், நெற்றியில் தொழுகை தந்த தடமும் அப்பாவை அடக்கி விட்டது. தொழுகை செய்த தடம் பிறை போல இருந்தது பேரழகு இதையெல்லாம் விட, சித்திக் பாய் அப்பாவை விடப் பணக்காரர் என்கிற காரணமே அப்பா அடங்கி விடப் போதுமானதாக இருந்தது.

தன் வஞ்சகமெல்லாம் சாதுர்யமென்றும், பொய்களெல்லாம் உபாயங்களென்றும் பொருத்திக் கொண்டார் அப்பா. அவருக்குள்ளேயே பொய்களை உருவாக்குவதில் நடந்த போட்டிதான் அவரை வாழ்வில் வெற்றி பெற வைத்திருக்கிறது என்று திடமாக நம்பினார். எங்களைத் தேடி நண்பர்கள் யார் வீட்டுக்கு வந்தாலும், அவர்களைப் பற்றிய முழுமையான ஆய்வை அப்பாவே செய்வார். “உங்க வீடு எங்க இருக்கு?“ “சொந்த வீடா, வாடகை வீடா?“ “உங்கப்பா என்ன வேலை பாக்குறாரு“ “மொத்தம் எத்தனை குழந்தைங்க?“ “என்ன ஆளுங்க?“ “சொந்த ஊரு எது?“ கேள்விக்கான விடையில் தான் நட்பு தீர்மானிக்கப்படும். நண்பர்கள் ஏழைகளாக இருந்து விட்டால், “பத்துப்பைசா பெறாத நாதாரிங்க கூடல்லாம் இது சேருது பாரு“? என்று அம்மா மீது விழுந்து புடுங்குவார். வசதியான குடும்பத்துப் பையன்களுக்கு உபசரிப்பும், கரிசனையும் வீடே மலைத்துப் போகும். எங்கள் நண்பர்கள் யாரும் முஸ்லீமாக இருக்கக் கூடாது. வீட்டில் யாரும் லுங்கி கட்டக் கூடாது. இதில் அப்பா சமரசமே செய்து கொண்டதில்லை. சித்திக் பாய் மீதான அவரது கோபம், முஸ்லீம்களின் மீதான கோபமாகத் திரிந்திருந்தது. முஸ்லீம்களின் மீதான கோபமோ, லுங்கியின் மீதான கோபமாகச் சிதைந்திருந்தது.

அப்பா, அண்ணா, தம்பி என மூன்று பேருமே நாலு முழ வேட்டிக்குப் பழகி இருந்தார்கள். எனக்கோ, அது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்தது. இரவெல்லாம் அது விலகாமல் கவனமாக இழுத்து விட்டுக் கொண்டே இருப்பதும், விடியற்காலையில் அது ஒரு புறமும், நான் ஒரு புறமுமாகக் கிடப்பதும் வாடிக்கையாகி விட்டது. என் உறுதிமொழிகளை ஒருநாலு முழ வேஷ்டி பொருட்படுத்தவேயில்லை. அண்ணனும், தம்பியும் போட்ட இடத்தில், போட்டபடி படுத்துக்கிடப்பார்கள். அம்மா இன்னும் விசேஷம். ஒட்டுகிற பொட்டு அல்ல வைத்த பொட்டு வைத்தது மாதிரி எழுந்திருக்கிற மகாலட்சுமி. அப்பா சொல்லி வைத்தது மாதிரி இரண்டு முறை புரண்டு படுப்பார். இதுவும் போதாதென்று, எந்தக் கோடையிலும் ஒரு போர்வையை மார்புவரை போர்த்திக் கொள்கிற பழக்கமும் வீட்டில் எல்லோருக்கும் இருந்தது.

எனக்குப் போர்வை ஆகாது. வியர்த்துக் கொட்டிவிடும். மொத்தத்தில், லுங்கியைப் போல மானம் காக்கிற ஆடை எதுவுமில்லை. இஸ்லாம் இந்தியாவுக்குக் கொண்ட வந்த அற்புதங்களில் லுங்கியும் ஒன்று. பாவாடைக்கும், லுங்கிக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. பெண்களின் கற்புக்குக் காட்டிய தீவிரத்தை தமிழர்கள் ஆண்களின் கற்புக்குத் தரவில்லை என்பது ஒப்புக் கொள்ளப்படத்தான் வேண்டும். லேசாக அழுக்குப் பட்டாலும் வேஷ்டி காட்டிக் கொடுத்துவிடும். லுங்கி அப்படியில்லை. இரண்டொரு நாள் காப்பாற்றும். தண்ணீர்ப்பஞ்சம் தலை விரித்தாடுகிற ஊரில் இருந்தால் தான் இதன் அருமை தெரியும்.

பகலில், காலேஜ் ஹாஸ்டலில் நண்பர்களின் அறையில் ஓரிரு முறை லுங்கி கட்டிக் கொள்ளக் கிடைத்திருக்கிறது. அதெல்லாம் போதுமானதாக இல்லை. ஒரு இரவு முழுவதும் கட்டிக் கொண்டு உருளுவதற்கு மனசு ஏங்கிக் கிடந்தது. இரவில், வெளியில் தங்குவதற்கு அப்பா ஒரு நாளும் அனுமதிப்பதேயில்லை. பொழுது சாயத் துவங்கியதும், பிள்ளைகள் மூன்று பேரும் வீடு திரும்பி விட வேண்டும். ஒரு விலங்கின் தவிப்பும், பறவையின் பதற்றமும் அவருக்குள் மீதமிருந்தது. எல்லாக் குற்றங்களும் இரவில் மட்டுமே நிகழ்வதாக அப்பா நம்பினார். அப்பாவின் மூர்க்கங்களுக்குப் பின்னே ஒரு குழந்தைத்தனமும், நிதானங்களுக்குப் பின்னே ஒரு பசித்த விலங்கும் இருந்தது புரிந்து கொள்ளவே இயலாத முரண். சாப்பிடுகிற போது கூட்டையோ, பொறியலையோ சோற்றுக்குள் வைத்துப் புதைத்து மறைத்துச் சாப்பிடுகிற பழக்கம் அப்பாவுக்கு இருந்தது. அவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறியவே முடியாது, என்பதற்கு அம்மா அதைத் தான் உதாரணமாகக் காட்டுவாள். ஒரு இரவு கூட, எங்களைப் பிரிந்து அப்பா இருந்ததேயில்லை.

வேலை கிடைத்து, சாத்தூரில் போய் வேலைக்குச் சேருகிற வரை இந்த நிகழ்ச்சி நிரலில் மாற்றமே இல்லை. சாத்தூருக்கு வந்த முதல் மூணு நாளும் நிஜாம் லாட்ஜில் கூடத் தங்கி இருந்து, தங்க வைப்பதற்கு இடம் தேடி, ஊரெல்லாம் விசாரித்து விட்டு, மணி சங்கர் பவனில் தங்க வைத்தார் அப்பா. வீடு என்றும் ஒப்புக் கொள்ள முடியாத, லாட்ஜ் என்றும் நிராகரிக்க முடியாத அமைப்பில் இருந்தது மணி சங்கர் பவன். எதிர் எதிரே முகம் பார்த்தது மாதிரி கிழக்குப் பார்த்து ஆறும், மேற்கு பார்த்து ஆறுமாக பன்னிரெண்டு குட்டி வீடுகள். வேறு வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கிற, எல்லா வயது ஆண்களும் குடியிருந்தார்கள்.

தெற்கு வடக்காக நடந்தால், எல்லா வாசலுக்கும் அழிக்கம்பிகள் போட்டு, சின்னச் சிறைச்சாலை போல இருந்தது தான் அப்பாவைக் கவர்ந்திருக்க வேண்டும். மூணு நாளும், அப்பா புத்திமதிகள் சொல்லிக் கொண்டேயிருந்தார். சாயங்காலம் ஆபீஸ் முடிந்ததும் அறைக்குத் திரும்பி விட வேண்டும். இரவில் எங்கும் திரியக்கூடாது என்பதை, முதலிலும் கடைசியிலும் மறக்காமல் சேர்த்துக் கொள்வார். முதல் சம்பளத்திற்கு இன்னும் இருபத்தி மூன்று நாட்கள் இருந்ததால் கைச் செலவுக்கு காசும் கொடுத்தார். “நீ சம்பாதிச்சு என்னைக் காப்பாத்த வேணாம், உன்னைக் காப்பாத்திக் கிட்டாபோதும்“ என்று எல்லா அப்பாக்களும் சொல்லும் வார்த்தையைக் கடைசியாகக் கண் கலங்க சொல்லி விட்டு, ஊருக்குப் போனார்.

முதல் சம்பளம் வாங்கியதும் அம்மா அப்பாவுக்கு அனுப்புவது, குல தெய்வத்திற்குக் காணிக்கை போடுவது போன்று ஒவ்வொருவருக்கும் ஒரு நேர்த்திக் கடன் இருக்கவே செய்யும். எனக்கானால், ஒரு லுங்கி வாங்க வேண்டும். அப்பா கொடுத்த காசில் லுங்கி வாங்க ஒப்பவில்லை. சம்பளம் வாங்கியதும், வெளிநாட்டுச் சாமான்கள் விற்கிற அந்தோணி கடையில், தொண்ணூறு ரூபாய்க்குப் பாலியஸ்டர் லுங்கி வாங்கி, இந்தியன் டெய்லரிடம் கொடுத்து மூட்டி, அறைக்கு வந்து குளித்து விட்டு லுங்கி கட்டிக்கொண்ட சுகத்தை, எழுத்தில் கொண்டு வர முடியாது.

கோழி முட்டையின் ஓட்டை ஓட்டினாற்போல இருக்கும் மெல்லிய சவ்வாக லுங்கி வழுக்கியது. வெளிநாட்டு சோப்புகள், வாசனைத் திரவியங்கள் பட்டதால், லுங்கிக்கு ஒரு வசீகரமான மணம் வேறு இருந்தது. இரண்டு நாளும் ஆபீஸ் நேரம் போக, மீதி நேரமெல்லாம் லுங்கிக்குள் தான் இருந்தேன். துவைக்க மனமில்லை. மெஸ்ஸுக்குச் சாப்பிடப் போகிறபோதெல்லாம் எல்லோரும் அதைப் பார்ப்பதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்றிரண்டு பேர் தொட்டுப் பார்த்து, விலையும் கேட்டது ரொம்ப நிறைவளித்தது. லுங்கிக்குள் படுத்திருந்ததும், அது விலகும் என்கிற கவலையின்றி உருண்டு படுத்து உறங்கியதும் சுயசரிதையில் எழுத வேண்டிய செய்திகள். எவ்வளவு உருண்டு படுத்தும், மானம் காத்தது லுங்கி. வேட்டிய கட்டிய நினைப்பில், கைகள் அதை இழுத்து விடப் போவதும், பிறகு மெல்லிய புன்னகையுடன் விரும்பிய திசைக்கு உருண்டு படுத்துக் கொண்டதும், இரண்டு இரவுகளிலும் நடந்தது.

மூன்றாவது நாள் காலை லுங்கியைத் துவைத்தேன். முறுக்கிப் பிழியவில்லை. பாலியஸ்டர் துணிகளை முறுக்கிப் பிழியக் கூடாது என்கிற நடைமுறை  விஞ்ஞான அறிவு எனக்கும் இருந்தது. அதிகம் வெயில் படாத இடமாகத் தேர்ந்தெடுத்து, காயப்போட்டேன். மூன்று கிளிப்புகளைச் சரியாக இடைவெளி கொடுத்து மாட்டினேன்.          ஆபீஸில் இருந்த போது, காற்றிலாடியபடி அது காய்ந்து கொண்டிருக்கும் காட்சி இரண்டொரு முறை கண்ணில் தெரிந்தது. மாலையில் அறைக்குத் திரும்பியதும் மொட்டைமாடிக்குத் தான் போனேன். போட்ட இடத்தில் லுங்கி இல்லை. எல்லா இடத்தில் தேடியும், எல்லோரிடமும் கேட்டும் லுங்கி கிடைக்கவேயில்லை. மணி சங்கர் பவனில் இருக்கிற எல்லோர் மீதும் சந்தேகம் வந்தது. தொலைந்தது நமது பொருளாக இருந்தால், யாரையும் சந்தேகிக்கிற அளவு புத்தி தாழ்ந்து போய் விடுகிறது. லுங்கி தொலைந்ததை விடவும், இந்த எண்ணம் மிகுந்த துயரமளித்தது. மறுநாள் வேறு ஒரு லுங்கி வாங்கினாலும், அந்த லுங்கியை மறக்கவே முடியவில்லை.

சாத்தூருக்கு வந்த புதிதில், பெருமாள் வாத்தியார் தான் மணி சங்கர் பவனில் இடம் பிடித்துக் கொடுத்தார். அப்பாவுக்கு யார் மூலமாகவோ அறிமுகம். வாத்தியாரிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என்று அப்பா சொல்லியிருந்தார். ஏதாவது அவசரம், தேவை என்றால் மட்டும் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அப்பா சொன்ன ஆலோசனை. நல்ல உயரத்தில், கம்பீரமாய், செதுக்கப்பட்ட மாதிரியான முகவெட்டுடன், வித்தியாசமான புன்னகையுடன் இருந்தார் பெருமாள் வாத்தியார். அரசியல், இலக்கியம், தத்துவம், பூகோளம், பொருளாதாரம், மதம், சாதி என்று எதைப் பற்றியும் விரிவாக, ஆழமாக, முற்றிலும் புதியதாகப் பேசினார் வாத்தியார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கிடைக்கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

ஒரு தாய்க்கோழி எட்டு பத்து குஞ்சுகளுடன் இரை தேடிப் போவது மாதிரி தான் வாத்தியார் வருவதும் போவதும் நடக்கும். அப்பா “சொன்னதற்காகவே“ அவரிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். உண்மை ஒளிரும் அவரது சொற்களால், அவர் விதைத்ததெல்லாம் வியப்பட்டும் சித்திரங்கள். ஊருக்கே பொதுவாக ஆறு ஓடினாலும், ஆற்றுக்குள் குளிப்பதற்கு சாதிவாரியாக உறைகள் (ஊற்றுக்கண்) போடப்பட்டிருப்பதை அவரே காட்டினார். தான் சாதி கெட்டவர்களுக்கென்று தனி உறை போட்டிருப்பதையும், “புத்திக்குள்ள சாதி இல்லாதவங்க“ அதுல குளிக்கலாமென்றும் சொன்னார். அந்த ஊரில் மட்டுமே இருந்த நிப்புத் தொழில் பற்றி நிறையப் பேசினார்.

நூற்றுக்கணக்கான நிப்புத் தொழிலாளிகளின் தலைவிதியை பால் பாயிணட் பேனாக்களின் வருகை மாற்றி எழுதி விட்டதையும், ஆறே மாதத்திற்குள் முப்பதுக்கும் மேற்பட்ட நிப்புப் பட்டறைகள் மூடப்பட்டதையும் மெஸ்ஸுக்குப் போகிறபோது காண்பித்தார். போதாக்குறைக்கு, முழுக்க முழுக்க இயந்திரத்தால் செய்யப்படும் மெழுகுத் தீப்பெட்டிகளின் வருகை வீடுதோறும் கையால் தீக்குச்சிகளை அடுக்கி, மருந்து முக்கித் தரும் சிறு தொழிலை பிரித்துப் போட்டதும் ஊரில் நிலவும் வறுமைக்குக் காரணம் என்றார். மழை அறியாத அந்தக் கந்தக பூமியில், ஒரே வருடத்திற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து, மாற்று வேலையும் கிடைக்காது வீதிக்கு வந்து விட்டதை, அவ்வப்போது நடக்கும் சிறு திருட்டுக்கள் உறுதி செய்வதாக, கண்கள் பனிக்க வாத்தியார் பேசிக் கொண்டேயிருந்தார். லுங்கி காணாமல் போனது கூட இதன் தொடர்ச்சியே என்றும், துணிகள் திருடுகிற அளவு வறுமை வலுத்திருப்பது துயரமளிக்கிறது என்றும் திருகிய குரலில் சொன்னார் பெருமாள் வாத்தியார்.

பதினைந்து நாளாகிறது லுங்கி தொலைந்து. தொடர்ந்த எனது துப்பறியும் வேலைகள் எந்தப் பலனும் தரவில்லை. உலகில் எத்தனையோ சமூக பிரச்சனைகள் இருந்தபோதும், என் லுங்கி தான் எப்போதும் என் புத்தியில் நின்றது. லுங்கியை மறப்பது என் அறிவை விசாலப்படுத்தும் என்பது தெரிந்தும், நினைப்பு நீங்கவேயில்லை. இரவு மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதற்குக் கூட வழியில்லாத, வகையில்லாத ஒருவன்தான் அதைத் திருடியிருக்க வேண்டுமென்று பெருமாள் வாத்தியார் சொன்ன கணத்தில், புத்தி மடை மாறி ஓடியது. “எடுத்துக் கொண்டவனே அதை சந்தோஷமாக அணிந்து கொள்ளட்டும்“ என்று ஒரு குரல் எனக்குள் கேட்டது. என் வளர்ப்பிற்கு, வாழ்க்கை முறைக்கு எனக்குள் இருந்து, இப்படியொரு குரல் வந்தது எனக்கே திகைப்பளித்தது. மனதை லேசாக்கி  இருந்தது. இரவு உறங்கிப்போன போது லுங்கியின் நினைப்பில்லை. காலையிலும் கூடத்தான். ஆற்றுக்குக் குளிக்கப் புறப்பட்ட போது, பதினைந்து நாட்களுக்குப் பிறகு பாரமின்றி, ஊசலாடாமல், சமநிலைக்கு வந்து நின்றது புத்தி. உடம்பின் கனம் குறைந்து போனது போலத் தெரிந்தது.

ஆற்றுக்குள் இறங்குகிற பாதைக்குப் போன போது, எதிரே மேடேறி வந்து கொண்டிருந்த என் வயதொத்த பையனின் இடுப்பில் மடித்துக் கட்டியிருந்த லுங்கி...  என்னுடையது தான். இருவருமே, ஒருவரையொருவர் பார்த்து திகைத்து நின்றோம். கையில் இருந்த வாளியைக் கீழே வைத்துவிட்டு மடித்துக் கட்டியிருந்த லுங்கியைக் கீழே இறக்கிவிட்டு, தலை குனிந்து அங்கேயே நின்றான் அவன். லுங்கி என்னுடையதே தான். கோபம் தலைக்கேற அவனை நோக்கி விரைந்தேன். வாத்தியார் சொன்னது நினைவில் புரண்டது. அருகில் போய், குனிந்து வாளியை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு, அவனது மெலிந்த தோளை மென்மையாகத் தொட்டு, “லுங்கி உனக்கு நல்லா இருக்கு...“ என்று சொல்லிவிட்டு வேகமாக ஆற்றுக்குள் இறங்கினேன். ஆற்றுக்குள் போகிற பாதை இறக்கமாக இருந்து மேலும் இழுத்தது. எனினும் ஊற்றுக்குப் போகிற பாதை.

- பாரதி கிருஷ்ணகுமார் ( bkkumar@live.com)

Friday, March 15, 2013


                                              “பரதேசி” விமர்சனம்!




        கதை களம்.  ஆரம்பகால தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றியது.  1930 களில் வறுமையில் வாடும் கிராமங்களைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் எவ்வாறு ஆசைவார்த்தை சொல்லி தேயிலைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லும் கங்காணிகள், பிறகு அவர்களை  எப்படி கொத்தடிமைகளாக மாற்றினார்கள், அவர்களின் வாழ்வு அங்கேயே எப்படி சிதைந்துபோனது என்று விவரிக்கிறது.   

                        Red Tea - எரியும் பனிக்காடு   -
எரியும் பனிக்காடு  என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப் பட்ட உண்மைக்கதை என்றாலும்,  முதல் பாதியைப் பொருத்தவரை  வெறுமனே நம்மை தாயர் படுத்தும் வேலைமட்டும்தான்.  இரண்டாம் பகுதியில்தான் மொத்த படத்தையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வேலை நடக்கிறது.  நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார் இயக்குநர் பாலா. நடிகர்கள் தங்களின் பங்களிப்பை மிக அருமையாக செய்துள்ளனர். செழியனின் ஒளிப்பதிவு பக்கபலமாக பயணிக்கிறது.  தமிழ் சினிமா ஒரு பெரிய மரம் என்றால் அதில்  “பரதேசி” மரத்தின் நடுவில் உள்ள வைரம் பாய்ந்த பகுதி எனலாம். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உருக்கி உருக்கி கடைசியில் நம் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரை பொசுகென்று வரவழைத்துவிடுகிறார்கள். அது நாம் இன்று குடிக்கும் தேனீருக்காக அன்று ரத்தம் சிந்தியவர்களுக்கு  அஞ்சலி செலுத்தியாக அமையட்டும்! 

இன்னும் சில பல வருடங்களுக்கு தமிழ் பட இயக்குநர்கள் யாரும் எடுக்கத் துணியாத வகை. இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு உலக அளவில்  புதிய அடையாளத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்!   பல விருதுகளை குவிக்கப் போகும் படம் என்றாலும், இது விருதுகளுக்கு அப்பார்ட்பட்டது. 

Saturday, August 18, 2012

ரா. கி. ரங்கராஜன் மறைவு

ரா. கி. ரங்கராஜன் (பி. 1927) ஒரு  பிரபலமான தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பல பாணிகளில் பல நூலகளை எழுதியுள்ளார்.

ரங்கராஜன் கும்பகோணத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆர். வி. கிருஷ்ணமாச்சாரி ஒரு சமசுகிருதப் பண்டிதர். சக்தி, காலச் சக்கரம், கல்கண்டு போன்ற இதழ்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கராஜன், 1947 முதல் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் ஆகியவை அவற்றுள் சில. நான் கிருஷ்ணதேவராயன் இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்); ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல் (டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள். கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுஷ்ய  கதைகளும் , டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன.
தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார்.


Tuesday, July 24, 2012

சென்னைக்கு வாருங்கள் பதிவர்களே! - தூரிகையின் தூறல்

சென்னைக்கு வாருங்கள் பதிவர்களே! - தூரிகையின் தூறல் Ignore warning

வணக்கம் தோழர்களே..சென்னையில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்..அதற்கான முதற்கட்ட வேலையாக நிகழ்ச்சி நிரலை ஒன்று கூடி பேசி தீர்மானித்து தயாரித்திருக்கிறோம்.
       இச்சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்குமா என சில பதிவர்களின் மனதில் சந்தேகம் இருக்கிறது.அதைப் போக்க முற்றிலும் பதிவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கவியரங்கம்,கருத்தரங்கம் என  சந்திப்பை பயனுள்ளதாக நடத்த முயற்சித்து வருகிறோம்.
       நிறைய தோழர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவியரங்கத்தில் பங்கொள்ள ஆர்வமாயிருக்கிறேன் என சொல்லி அதற்கு தயாராகி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது .பதிவர்களுக்கு பயனுள்ள சந்திப்பாய் இருக்கும் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்போம்..நன்றி..

                                   நிகழ்ச்சி நிரல்


Wednesday, July 11, 2012

மூன்றாம் உலகப் போர்

varum 13/07/2012 முதல் வைரமுத்துவின் 
   மூன்றாம் உலகப் போர்

5-க்கும் மேற்பட்ட பிரதிகளை முன்பதிவு செய்து 12% கழிவினைப் பெறுங்கள்!

Tuesday, May 15, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – எனது (வேடியப்பன்)  துவக்க உரை





சென்னையில் பதிவர் சந்திப்பு என்றால் அது பெரும்பாலும் டிஸ்கவரி புக்  பேலஸில்தான் நடக்கும். இதுவரை ஒரு முறை கூட நில அபகரிப்பு கேஸ் போடாமல் நமக்கு இடம் அளித்து வரும் உரிமையாளர் வேடியப்பன் அவர்களுக்கு மிக்க நன்றி. வரும் மே 20 ஆம் தேதி ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ள சென்னை யூத் பதிவர் சந்திப்பின் முன்னோட்டமாக வேடியப்பன் அவர்களின் மடல் உங்கள் பார்வைக்கு: நன்றி.  மெட்ராஸ் பவன்

                                                                     
   மீண்டும் ஒரு பதிவர் சந்திப்புக்கு தயாராகிவிட்டோம். இந்த நேரத்தில் எப்போ எங்கு எப்படி செம்புலப்பெயர் நீர்போல் பதிவர்களோடு நான் கலந்துபோனேன் என்று கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையில்லை. எனக்கும் பதிவர்களுக்குமான  இந்த உறவு என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லலாம். ஆனால் ஒரு விவாசாயி பெத்த புள்ளைங்கிற முறையில எனக்கு தெரிஞ்சு எந்தப் பயிரும் ஆயிரங்காலத்துக்கு அழியாம தொடருதான்னு தெரியில. நான் சின்ன வயசுல பாத்த சாமை, வரகு, தினை போன்ற சத்துமிக்க பயிர் வகைகளே இப்போது காணாமல் போச்சு. சரி ஆயிரங்காலத்துப் பயிர் வேணா, ஆயிரங்காலத்துப் File எனலாம் என்றால் காலையில சேவ் செய்து வெச்சுட்டுப்போற பைல மதியம் வந்து ஓபன் பண்ணுனா வைரஸ் அது இதுனு காணாமப் போயிடுது. அப்போ எந்த உவமையை அடிப்படையா வெச்சு எனக்கும் பதிவர்களுக்குமான பந்தத்த விலக்க முடியும்னு நம்புறேன்னு தெரியில. யாராவது காசுகொடுத்தால் ஒரு புத்தகமாகவே போட்டு சம்பாதித்து விடுவேன். அவ்வளவு விசயம் ஒரே நேரத்தில ஞாபகத்திற்கு வருது.  



வந்த வேலையை விட்டுட்டு பந்தக்காலைப் பிடிச்சுட்டு நிக்கிறான்னு சொல்லுவாங்க. அப்படித்தான் நான் இப்போ சொல்ல வந்தத விட்டுட்டு வேற எதையோ எழுதிட்டு இருக்கேன்னு நினைச்சீங்கன்னா அதுக்கு காரணம் பதிவர்களான நீங்கதான். நீங்க கத்துக் கொடுத்ததுதான். சரி விசயத்துக்கு வரேன்.  2009 முடிவில் டிஸ்கவரி புக் பேலஸ் ஆரம்பிச்சப்பதான் எனக்கு பதிவர்கள், பிளாக்கர்ஸ்ங்கிற சொல்லே கேள்விப்பட்டேன். அப்புறம் கேபிள்ஜி எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுக் கொடுத்து எழுதுனு சொன்னப் பிறகுதான் சரி... ப்ளாக் எழுதிறதில இருக்கிற நல்லது கெட்டது தெரிஞ்சது. 

நான் ஒரு போஸ்ட் போட்டுட்டு, அதை படிக்கச் சொல்லி நானே போன் போட்டு சொல்லி, அப்புறம் பின்னூட்டம் வேற போட்டாகனும்னு கட்டாயப்படுத்திய காலங்களில்தான் உங்களின் சகிப்புத்தன்மையை நான் முழுதாக உணர முடிந்தது. எனக்கும் அப்போ ஆயுசு கெட்டிங்கிற சந்தோஷம். அதுக்கபுறம்தான்  சரி.. வேணா.... முதல்ல மற்றவங்க எழுதுறத நம்ம படிக்க ஆரம்பிக்கனும்னு ஒரு முடிவுக்கு வரமுடிஞ்சது.  சென்னையில இன்னைக்கு டிஸ்கவரி புக் பேலஸ்- ஒரு தவிர்க்க முடியாத புத்தக கடையா மாறி இருக்குனா அதுக்கு காரணம் நிச்சயமா பதிவர்கள்தான்னு உறுதியா சொல்வேன். வருகைத் தரும் ஒவ்வொரு பதிவர்களையும் நான் ஆவலோட எதிர்பார்ப்பேன். அவர்களோடு தொடர்ந்து நல்ல நட்பை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். 

அதேபோல் இதுவரை எந்தப் பதிவர்களும் யாரும் தவறாக ஒரு வார்த்தை பேசி நானும் பார்த்த்தில்லை. அந்த வகையில் உண்மையில் பதிவர்கள் அன்பு என்ற கயிற்றில் ஒற்றுமையாக காயும் உப்புக்கண்டம் எனலாம். அதனால் சாதாரண இதை பதிவர் சந்திப்புனு சொல்லிட முடியாது. நமது நலம் விரும்பிகளை ஒரு நாள் நமது வீட்டுக்கு அழைப்போம் இல்லையா..அப்படியே!
   
தவிர்க்கவே முடியாத காரணத்தால்தான் மே 13.ம் தேதி நாம் டிஸ்கவரி புக் பேலஸ்-ல் பதிவர் சந்திப்பு நடத்த  முடியாமல் போனது. அதன் பிறகு கே.ஆர்.பி வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும்போது நான் முடிந்த அளவு முயற்சிக்கிறேன் என்றேன், 13 அம் தேதி அன்று புத்தக விமர்சனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் முடியாது என்றும், பத்திரிக்கைகளுக்கெல்லாம் தகவல் சொல்லிவிட்டோம் என்றும் சொன்னார்கள், துயரமான முடிவுகளைக் கொண்ட காதல் படங்களின் கடைசிக்காட்சியில் காதலனின் கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிப் போகும் காதலியைப் போல  கே ஆர் பியை நான் பிரிந்து விடை பெறும்போது எல்லையில்லா ஏமாற்றத்தோடு இந்தமுறை நாம் பதிவர்களை தவறவிட்டுவிட்டோம் என்று நினைத்தேன். அதோடு அதே 13.ம்தேதி நமக்கும் நிகழ்ச்சி இருப்பதால் குறைந்தபட்சம் கூட்டத்தின் ஒரு மூலையில் நின்று கைவிடப் பட்ட காதலனைப்போல ஒரு வாய் காஃபி தண்ணிகூட குடிக்கமுடியாமல் போய்விட்டதே என்று ஏங்கினேன்.  என்ன ஆச்சரியம்?  5 வருடம் கழித்து என்று டைட்டில் கார்டு போட்டு சேர்த்து வைத்து காதலைக் காப்பாற்றும் இயக்குநர்களைப் போல ஒரு வகையில் நாம் ஒரு வாரம் கழித்து சேர்ந்து இருக்கப் போகிறோம் என்று நினைக்கும் போது  நமக்கான பந்தம் ஏழேழு ஜென்மத்திற்கும் நிலையானது.. அய்யோ அம்மா..  மன்னிச்சுக்குங்க, என்னைக்கும் நிலையானது:    

தோழமையுடன்!
வேடியப்பன்.

Saturday, March 24, 2012

ஒய் திஸ் உலை வெறி!

    ஒய் திஸ் உலை வெறி? -    ஓ பக்கங்கள் -ஞாநி காட்டம்   
    ****************************

    இந்த வார கல்கியில் ( கல்கி 14.1.2012 ) மத்திய அரசின் பொய்யான பிரச்சாரம் பற்றி காட்டமாக விமர்சித்திருகிறார்.. சமீப காலமாக மீடியாக்களில் அரசின் அணு உலை ஆதரவுப்பிரச்சாரம் ஒரு எல்லையை மீறி சென்று கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்..


    கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன் அணுசக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் அவை போடும் விளம்பரங்களைப் பார்த்தால் அணு மின் நிலையம் இல்லாத இடங்களில்தான் புற்று நோய் அதிகம் என்றும் அணுமின் நிலையம் இருந்தால் புற்று நோய் அந்த வட்டாரத்தில் குறைந்துவிடுவதாகவும் தெரிகிறது.




    உலக அளவில் இப்படி ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்.




    புற்று நோய் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா புற்று நோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று அரசு பிரசாரத்தில் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. கதிரியக்கம் எப்படி புற்று நோயை ஏற்படுத்துகிது என்று மலைமலையாகத் தகவல்கள், ஆய்வுகள் கொட்டிக் கிடக்கின்றன இணையத்தில் உலகம் முழுவதும் கதிரியக்கம் புற்று நோயை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம்.




    அதுவே பொய் என்று ஒரு டாக்டரை சொல்லவைக்கிறது இந்திய அரசு. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி ரொம்பத் தெளிவாகவே சொல்ல்யிருக்கிறான்.

    இந்திய அரசு தூண்டிவிட்டிருக்கும் இன்னொரு பிரசாரம் கூடங்குளம் அணு மின் நிலையம் வராவிட்டால் தமிழகமே இருண்டுவிடும் என்பதாகும். கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் வருமாம்.


    இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

    ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான்.

    இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான்.

    இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம்.

    ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.


    இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில் 4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும்.


    காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது.


    சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத் தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில் 300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில் இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம் 2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் !




    சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று அணு ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வது இன்னொரு பொய். எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு கிலோவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.




    இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது.




    ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.




    காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்பது அவர்களின் இன்னொரு வாதம். முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார், ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ் நடத்தச் சொல்வோமா ?




    இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம், விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது.




    இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத் தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.




    மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில் ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது. அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது.




    சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம். போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம்.




    வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி தெரியுமா? இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள் கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது.


    உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. .




    இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது.




    இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல் பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது.




    அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டும்.


    ஏன் இந்திய அரசுக்கு மட்டும்
    இந்த கொலைவெறியான உலைவெறி?

    -செல்வகுமார் வழியாக
    24.மார்ச்.2012