நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Monday, August 16, 2010

காலச்சுவடு புத்தக கண்காட்சி

வாசகர்களே..! காலச்சுவடு பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களும் இப்போது  15/8/2010 முதல் 31/9/2010 வரை சிறப்புக் கழிவு 10% டன் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது, எந்த புத்தகமும் இல்லை என்று சொல்லாத அளவு  அனைத்து புத்தகளும் வரவழைக்கப் பட்டுள்ளதால் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Saturday, August 14, 2010

சிலப்பதிகாரம் தழுவிய “மாதரி கதை” நாடகம். நாளை மக்கள் தொலைக்காட்சியில்

       

சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரங்களில்
ஒன்றான மாதரி என்ற பெண்ணின்
 பாத்திரத்தை மையப்படுத்தி எழுத்தாளர் வெளி ரங்கராஜன் அவர்கள் இயக்கிய நாடகம் “ மாதரி கதை”. இந்நாடகம்  ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சியில் 12.00 மணி முதல் 1.00 மணிவரை ஒளிபரப்பாக உள்ளது. நமது காப்பிய இலக்கியத்தின் ஒரு பகுதி இன்றைய நவீன நாடகவடிவத்தோடு இணைந்து தன்னை எவ்வாறு அலங்கரித்துக் கொள்கிறது என்பதை அனைவரும் தவறாமல் பார்க்கவும்.

Wednesday, August 4, 2010

“நகரத்துக்கு வெளியே” விமர்சன கூட்டம் குறித்து - /என்.விநாயக முருகன்

நன்றி உயிரோசை இணைய இதழ்

சிறுகதைகள் வாசிப்பதும், எழுதுவதும் அருகி விட்ட சூழலில் விஜயமகேந்திரனின் 'நகரத்திற்கு வெளியே' தொகுப்பின் மீதான விமர்சனக் கூட்டம் கவனம் பெறுகிறது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் ஏற்பாடு செய்திருந்த இந்த விமர்சனக்கூட்டம், மேற்கு கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது.

பெருநகரப் பரபரப்புகள் ஏதுமற்ற, மழை வருமா… வராதாவென்றிருந்த ஞாயிறொன்றின் மந்தமான மாலையில் டிஸ்கவரி புக் பேலஸிற்கு சென்றேன். டிஸ்கவரி புக் பேலஸ் எதிரே இருந்த தேநீர்க்கடையில் ஒரு பெண் தோளில் பையுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். கடையருகே நெருங்கும் போதுதான் லீனா மணிமேகலையும், பக்கத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஜெல்ராடையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஊரின் அழகான ‌சில பெண்கள் ஸ்கூட்டியில் தேநீர்க்கடையைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் கடை மாடியில் முதல் தளத்தில் இருக்கிறது. மாடி ஏறினேன். பின்னால் தாரா கணேசன் வந்துககொண்டிருந்தார். கடைக்குள் ஏற்கனவே பொன்.வாசுதேவன், யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், ஆர்.அபிலாஷ், பாக்கியம் சங்கர் மற்றும் செல்வப்புவியரசன் இருந்தார்கள். கடந்த ஆண்டுதான் மேற்கு கே.கே. நகரில் இந்தப் புத்தகக்கடையை ஆரம்பித்தார்கள். இன்று இலக்கியக் கூட்டங்கள் குறிப்பாக பதிவர் கூட்டம் என்றால் டிஸ்கவரி புக் பேலஸ் என்று சொல்லுமளவுக்குக் கடை பிரபலமாகியுள்ளது. கடையில் இருந்த புத்தக அலமாரிகளைத் தற்காலிகமாக ஓரங்கட்டிவிட்டால் ஐம்பது பேர் அமரலாம்.

கடை உரிமையாளர் வேடியப்பனைப் பார்த்து ஒரு ஹலோ ,சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து சுற்றிலும் பார்த்தேன். சிறுகதைத் தொகுப்பா அல்லது கவிதைத் தொகுப்பா என்று ஒருகணம் குழம்பி விட்டது. சி.மோகன், லீனா மணிமேகலை,யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், நரன்,நிலாரசிகன், ச.முத்துவேல்,உழவன் என்று கவிஞர்கள் கூட்டமாக இருந்தது. குறிப்பாக கார்த்தி, லக்கி லுக், அதிஷா, கேபிள் சங்கர், மணிஜி மற்றும் பல தமிழ் பதிவர்களை அதிகமாக பார்க்க முடிந்தது. முன் வரிசையில் சந்திரா, நிஜந்தன் அமர்ந்திருந்தார்கள்.

கூட்டத்தின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது. ஒருவர் முகம் முழுவதும் வர்ணம் பூசிக்கொண்டு வந்தார். அவர் கூத்துப்பட்டறை மாணவர் தம்பிச்சோழன். அவரது கவிதை நிகழ்த்துதலென்ற வித்தியாசமான நிகழ்வுடன் கூட்டம் தொடங்கியது. பார்க்க உண்மையில் புதுமையாக இருந்தது. சி.மோகன் மற்றும் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை தம்பிச்சோழன் அற்புதமாக நிகழ்த்திக் காட்டினார். அதைத் தொடர்ந்து பேசிய தாரா கணேசன் "கவிதை வாசிப்பது ஒரு கலை. இதுபோன்ற கவிதை நிகழ்த்துதல் கவிதையின் வீரியத்தை இன்னும் மெருகேற்றி ரசிக்க வைக்கிறது. கவிதை வரிகளுக்கு புதுப்பரிமாணம் கிடைக்கிறது" என்றார்.

தொகுப்பைப் பற்றி முதலில் பேசிய யவனிகா ஸ்ரீராமின் பேச்சு மிக அருமையாக இருந்தது. நவீன உலகின் ஒவ்வொரு பொருளும் பாலியல் வடிவம் கொண்டிருக்கின்றன. பத்திரிகை செய்திகள், அட்டைப்படங்கள், ஏன் மின்சார வயர்கள், ஒரு பேருந்தின் சக்கரத்தைப் பார்க்கும்போது கூட பாலியல் இச்சைகள் கிளறப்படும் காலக்கட்டம் இது என்று குறிப்பிட்டார். விஜயமகேந்திரன் தனது கதைகளில் பெருநகர பாலியல் சிக்கல்களை எப்படி எதிர்நோக்குகிறார் என்று பேசினார். குறிப்பாக ஒரு நகரத்துக்கு வெளியே என்ற கதையில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்கள் முடிவற்ற காமத்தின் சுழலில் மாட்டிக்கொண்டு உழல்வதைக் குறிப்பிட்டார். கவிஞர் ஐயப்பமாதவன் பேசுகையில், "நான் இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். யாருக்கும் எனது பெயர் தெரியவில்லை. சிறுகதை எழுதும் முயற்சிக்கு வந்துவிட்டேன்" என்றார். விஜயமகேந்திரனது தொகுப்பில் நான் படித்த "இருத்தலின் விதிகள்" சிறுகதை நினைவுக்கு வந்தது. நான் எதிர்பார்த்தது போலவே ஐயப்பமாதவன் அந்த சிறுகதையைப் பற்றிதான் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்து பேச வந்த தாரா கணேசன் எழுதியெடுத்து வந்த விமர்சனக் கட்டுரையைக் கூட்டத்தில் வாசித்தார். ஓ.ஹென்றி கதைகளில் முடிவில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். பின்நவீன காலகட்டத்தில் இதுதான் வடிவமென்று எவ்வித நிர்ணயமும் அவசியமற்றுப்போன நிலையும் உருவாகிக்கொண்டிருக்கிறது. வாழ்வு நகரும் வேகத்திற்கு ஏற்ப சிந்தனையின் வடிவமும் மொழியின் வடிவமும் இலக்கியத்தின் வடிவமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கதைக்குத் திட்டவட்டமான முடிவு இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறுகதை இன்னொரு சிறுகதையின் ஆரம்பமாக இருக்கலாம். தொகுப்பிலுள்ள ‘மழை புயல் சின்னம்’ சிறுகதை மற்றும் ‘அடைபடும் காற்று’ சிறுகதைகள் பற்றி குறிப்பிட்டார். பின்னர் பேச வந்த ஆர்.அபிலாஷும் ’மழை புயல் சின்னம்’ கதையைச் சிலாகித்துக் குறிப்பிட்டார். ஆர்.அபிலாஷ் பேசும்போது மிகவும் பதற்றமாக இருந்தார். விஜயமகேந்திரனது சிறுகதையின் வெற்றியே அவரது கதைகளில் இரண்டு முரண்நிலை கதாபாத்திரங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் போக்கு என்று சொன்னவர் "ராமநேசன் எனது நண்பன்" கதையை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

விஜயமகேந்திரனின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம், சிக்கலில்லாத அவரது மொழி நடை. கதைகளை வாசிக்கையில் ரயிலின் தடதடப்பு போன்று வேகமாகக் கடந்து சென்றுவிடுகிறது. சிலவிநாடிகள் அதிர்வுகளை மறக்காமல் விட்டுச்சென்றபடி. நகரத்து வாழ்வின் சிடுக்குகள் அவரது கதையெங்கும் விரவிக் கிடந்தாலும் அவரது மொழியில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. அநேகமாக கலந்து கொண்ட அனைத்துப் பங்கேற்பாளர்களும் இதை சுட்டிக் காட்டினார்கள். கூட்டத்தில் செல்வப்புவியரசன் சொன்னது போல விஜயமகேந்திரன் எழுத்து நடை வெகுஜன பத்திரிகைகளுக்கும் பொருந்துவது போலிருக்கிறது. அதேநேரம் அவரது கவனமும் செயல்பாடுகளும் சிறுபத்திரிகைகளை நோக்கியே இருக்கிறது. தொகுப்பிலுள்ள "நகரத்திற்கு வெளியே" கதை படிக்கும்போது எனக்கு ஏனோ ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா கதை மனதின் மூலையில் லேசாக வந்து சென்றது. பெருநகரப் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான உளவியல் மோதல்களை எழுதுவது விஜயமகேந்திரனுக்கு அருமையாக வருகிறது. இதை விஜயமகேந்திரன் தொடரலாம். தொகுப்பிலுள்ள ‘ஊர்நலன்,’ ‘காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன்’ போன்ற சிறுகதைகளில் அவ்வளவாக லயிப்பு ஏற்படவில்லை.

வாசிப்பனுபவம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் அவரவர் ரசனை அடிப்படையில் அவரவருக்குப் பிடித்த சிறுகதையைக் குறிப்பிட்டு பேசினாலும், எல்லோரும் சிலாகித்துக் குறிப்பிட்ட ‘இருத்தலின் விதிகள்’, ஒரு எழுத்தாளருக்கு அல்லது ஒரு இலக்கிய வாசகருக்கு சமூகம் எந்தளவு மரியாதையைத் தருகிறது. சமூகத்தை விட்டு விடலாம். அவனது குடும்ப உறுப்பினர்களிடத்து எந்தளவு மரியாதை கிடைக்கிறது. இந்தக் கதையில் வரும் முகம் தெரியாத அந்தத் தீவிர இலக்கிய வாசகரின் முகம் எப்படியிருக்கும்? அவர் ஏன் இறந்திருப்பார்? இது தொகுப்பின் இன்னொரு அருமையான சிறுகதை. பன்னிரண்டு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இரண்டு மூன்று சிறுகதைகளைத் தவிர மற்ற எல்லாமே அருமையாக வந்திருப்பதே இத்தொகுப்பின் வெற்றி. அநேகமாக விஜயமகேந்திரனது எல்லா கதைகளிலும் புறக்கணிப்பின் வலி இருக்கிறது. பெருநகரப் பரபரப்பில் முகம் தொலைத்த மனிதர்கள் சதாசர்வநேரமும் அந்த வலியை சுமந்தபடியே திரிகிறார்கள். வலியைச் சுமந்தபடியே வேலை செய்கிறார்கள். வலியை சுமந்தபடியே உண்கிறார்கள். வலியைச் சுமந்தபடியே புணர்கிறார்கள்.வலியைச் சுமந்தபடியே உறங்குகிறார்கள். வலியை சுமந்தபடியே செத்தும்போகிறார்கள்.


எல்லா இலக்கிய கூட்டங்களிலும் நடப்பது போலவே இங்கேயும் தம் அடிக்க எழுந்து சென்றபடியும், சென்றவர்கள் வந்தமர்ந்தபடியும் இருந்தார்கள். இருந்தாலும் பெரும்பாலும் கடைசிவரை அமர்ந்திருந்தார்கள்.பலரைக் கூட்டம் முடிந்து கடைக்குக் கீழே சாலையில் சந்தித்து உரையாட முடிந்தது. நேரமின்மையால் சிறுகதைத் தொகுப்பின் மீதான பார்வையாளர்களது கலந்துரையாடலை நடத்த முடியவில்லை. கூட்டம் முடிந்து எல்லாரும் கிளம்ப லேசாக மழை தூற ஆரம்பித்தது. ரம்யமான பெருநகர மழைச்சாரலில் நனைந்தபடி சைக்கிள்காரர்களும், பாதசாரிகளும், துப்பட்டாவைத், தலையில் போர்த்தியபடி ஸ்கூட்டி இளம் பெண்களும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவொருவருக்குள்ளும் சில கதைகள் இருக்கலாம். பெருநகரம் இன்னும் எத்தனைக் கதைகளைத் தன்னுள்ளே வைத்துள்ளதென்று தெரியவில்லை. எல்லாம் தெரிந்தாற்போல மழை கொட்ட ஆரம்பித்தது.

நகரத்திற்கு வெளியே / விஜய்மகேந்திரன்
 விலை- ரூ . 50
 டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது.